Map of Tamilnadu

Tuesday, June 17, 2014

P4 மாதிரிப் பயிற்சி - ஜூன் 2014...

இந்தக் கருத்தறிதல் பகுதியைப் படித்து அதற்குக் கீழ் உள்ள வினாக்களுக்கு விடை கொடுக்க முயற்சி செய். ~~~~~ விக்ரம் பள்ளி முடிந்து வீடு திரும்பினான். அவன் வீட்டின் கதவு பூட்டியிருந்தது. இது அவனுக்கு அதிர்ச்சியைத் தந்தது. அவன் வருகைக்காக அவன் அம்மா தினமும் வாசலில் காத்துக் கொண்டிருப்பார். அம்மாவைக் காணாதது அவன் மனத்தை என்னவோ செய்தது. அப்படி எங்கேயும் செல்ல வேண்டியிருந்தால் அம்மா அவனிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டுத் தான் போவார். ஆனால், அன்று அவர் அப்படி ஒன்றும் சொல்லவில்லை. அவன் இவ்வாறு எல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தபோது, அவன் அண்டை வீட்டாரின் கதவு திறந்தது. அவன் நண்பன் அலி தான் அவன் அண்டை வீட்டுக்காரன். அலியின் பாட்டி, “நீ எப்போது வந்தாய்? நீண்ட நேரம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார். “இப்போது தான் வந்தேன், பாட்டி,” என்றான் விகரம். அவன் ஏதேனும் கேட்பதற்கு முன் அலியின் பாட்டியே “உன் அம்மாவுக்கு உடல் நலம் இல்லை. அதனால் அவர் மருத்துவரைக் காணச் சென்றுள்ளார்,” என்று கூறினார். இன்னும் சற்று நேரத்தில் அவர் வந்து விடுவார் என்றும் கூறினார். அதோடு, அவன் அம்மா பாட்டியிடம் அவனுடைய மதிய உணவைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளதாக அலியின் பாட்டி கூறினார். விக்ரம் அவர் வீட்டிற்குச் சென்று அம்மா கொடுத்து விட்டுச் சென்ற உணவைச் சுவைத்துச் சாப்பிட்டான். பின் பாட்டியின் அனுமதியுடன் அலியோடு கணினியில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அம்மா வந்ததும் பாட்டிக்கு நன்றி சொல்லி விட்டு வீடு திரும்பினான். 1. விக்ரமுக்கு எது அதிர்ச்சியைத் தந்தது? 2. அம்மா அவனுக்காக எங்கே காத்திருப்பார்? 3. அலியின் பாட்டி அவனிடம் என்ன கூறினார்? 4. அம்மா பாட்டியிடம் எதைக் கொடுத்துவிட்டுச் சென்றார்? 5. விக்ரம் அண்டை வீட்டில் என்னென்ன செய்தான்?

No comments:

Post a Comment