Map of Tamilnadu

Friday, August 12, 2011

இனிய வாக்கியங்களையும், அழகிய சொற்றொடர்களையும் படியுங்கள்!

மாணவர்களாகிய நீங்கள் தொடக்கநிலை நான்கிலிருந்து ஆறு வரையில் அதற்கும் மேல் கூட சில இனிய வாக்கியங்களையும், அழகிய சொற்றொடர்களையும் 
கட்டுரை எழுதும் பொழுதும் வாய்மொழித் தேர்வுகளில் பேசும் போதும் பயன்படுத்தலாம்.  
அதற்கேற்றாற்போல வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ள நான் உங்களுக்குப் பாகுபடுத்தப்பட்ட சில இனிய வாக்கியங்களையும், அழகிய சொற்றொடர்களையும் கொடுத்திருக்கிறேன்!
படியுங்கள்! பயனடையுங்கள்!!

இயற்கை

* சிலு சிலுவென தென்றல் காற்று வீசிக்கொண்டிருந்த வேளை!

* நண்பகல் வெயில் அனலாக இருந்தது!

* பொன்னிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பசுமையான தோட்டம் அது.

* இரு மருங்கிலும் பசுமையான காட்சிகளைக் கண்டு களித்தான்

* கண்களைக் கவரும் இயற்கை அழகு



மாலை நேரம் / இரவு

* வட்ட வடிவழகி நிலாப் பெண்ணாள் தன்னொளியை வீசிக்கொண்டு வானத்தில் பவனி வரும் நேரம்.

* மாலைக் கதிரவனின் செம்மை உலகம் முழுவதும் பரவியது

* கதிரவனின் ஒளிமென்மையாகவும் மாலைக் காற்று சில்லென்றும்
இதமாகவும் இருந்தது.

* கதிரவன் கோபம் தணிந்து பூமியிலிருந்து ஒதுங்கிட, காற்று ஜில் என்று
வீசியது.

* கதிரவன் தன வேலையைச் சந்திரனிடம் ஒப்படைத்துச் சென்றான். விண்மீன்கள் பளிச் என்று மின்னின!

* நீல வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நட்சத்திறங்கள் கண் சிமிட்டின.





அதிர்ச்சி 

* அடிவயிற்றில் இடி விழுந்தது 

* திகிலடைந்தேன் 

* வார்த்தைகள் தொண்டைக்குழியில் மாட்டிக்கொண்டு வெளிவரத் தவித்தன 

* இதயத் துடிப்பே ஒரு கணம் நின்றுவிடும் போல ஓர் உணர்வு ஏற்பட்டது 

* ஒரு கணம் செய்வதறியாது திகைத்து நின்றான் 

* என்னை தொட்ட பொழுது தான் நான் சுய நினைவுக்கு வந்தேன் 





இன்னல் படுவது / துன்பம்

* வலையில் அகப்பட்ட மீனைப்போல வேதனையில் துடித்தான்

* சிங்கத்திடம் சிக்கிய மானைப்போல மிரண்டான்

* துக்கம் தொண்டையை அடைக்க கண்களில் நீர் அருவியென வழிந்தது

* நோய் வாட்டத் தொடங்கியது

* என் கண்களிலிருந்து நீர் சொரிந்தது. என் உள்ளம் அழுதது

* கண்ணீர் ஆற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது

* முகத்தில் ஈயாடவில்லை

* அவள் தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள்

* எதையும் பேச நா எழவில்லை



கவலை

* சோகக் கடலில் மூழ்கி இருந்தேன்

* மலர்ந்த முகம் வாடியது

* முகத்தில் சோகம் நிழலாடியது

* உலகம் இருண்டு விட்டது போல இருந்தது

* அவன் நிலை குலைந்து நின்றான்

* முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு



காற்று
* காற்றின் அசைவினால் மரங்களில் ஏற்பட்ட சலசலப்பு அந்த நிசப்தத்தில் நன்றாய்க் கேட்டன
* தென்றல் இனிமையாக வீசி மரங்களில் விரிந்திருந்த மலர்களின் மணத்தை எங்கும் பரப்பியது
* தென்றல் அவனது முகத்தை முத்தமிட்டுச் சென்றது
* தென்றல் இதமாக வீசி அவன் கன்னத்தைத் தடவிச் சென்றது
*  சிலு சிலுவென்று வீசிக்கொண்டிருந்த தென்றல் அனைவரையும் மயக்கியது

கொண்டாட்டம் - மகிழ்ச்சி


* அவனுள்ளத்தில் ஒரு வகை உல்லாசம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது

* முகமெல்லாம் பல்லாகத் தெரிந்தது

* என் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி தோன்றியது

* என் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை!

* பிள்ளையின் செயலைக் கண்ட பெற்றோர் பேருவகை அடைந்தனர்

* உல்லாச வானில் சிறகடித்துப் பறப்பது போல இருந்தது

* சொர்க்கலோகத்தில் இருப்பது போல உணர்ந்தாள்

* ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழியும் வரை சிரித்தேன்

* மகிழ்ச்சி வெள்ளம் அவன் மனதில் கரை புரண்டோடியது

* அன்று மலர்ந்த மல்லிகை போல அவன் முகம் மலர்ந்தது

* மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்

* நெஞ்சில் நிரம்பிப் பொங்கிக்கொண்டிருந்த ஆனந்தம் கண்ணீராய்
வெளிவந்தது




மழை

* கார்மேகங்கள் வானத்தைச் சூழ்ந்தன

* மழை வருவதற்கு  அறிகுறியாக கருமுகில்கள் வானத்தைச் சூழ்ந்து கொண்டன

* பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்தது

* வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. மேகங்கள் கதிரவனை மறைக்கத் தொடங்கின




ஒற்றுமை

* பூவும் நாறும் போல

* நகமும் சதையும் போல

* இணை பிரியா தோழிகள்

~~~~~~~~~~~~~~~~~ more coming soon.

Monday, August 8, 2011

தொடக்கநிலை 6 - தேசிய தின வீட்டுப்பாடம்!

மாணவர்களே, இல் என்னால் பாடத்தைப் புகுட்ட முடியவில்லை. ஆதலால் 
நான் இங்கு உங்கள் தேசிய வீட்டுப்பாடத்தைக் கொடுக்கிறேன். பதில்களை 
ஒரு தாளில் நீங்கள் எழுதி வாருங்கள். 
A1 வேற்றுமை

Q1 முதல் Q6 வரையுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமான வேற்றுமை உருபு ஏற்ற சொல்லைக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களிலிருந்து தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு. (12 மதிப்பெண்கள்)

அது பள்ளி விடுமுறை காலம். மாலை நேரத்தில் சேகரும் வீராவும் பூங்காவில் சந்தித்து விளையாடுவது வழக்கம். அன்றும் அவர்கள் கையில்  ( Q1)_______ வீட்டை விட்டு புறப்பட்டனர். அவர்கள்  (Q2)______ கீழ்த்தளத்தில் சந்தித்தனர். இருவரும் வேகமாக சறுக்கிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். அப்போது எதிரே வந்த  (Q3)_______  மின்னலாய் சறுக்கி வந்த சேகர் மோதினான். மீனா தரையில் விழுந்தாள். மீனாவின்  (Q4)_______ ரத்தம் கொட்டியது. சேகர் அதிர்ந்து போனான். அந்தப் பக்கமாக சென்றவர்கள்  (Q5)________ வந்தனர். அவர்கள் உடனடியாக (Q6) _________ மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டனர். விரைந்து வந்த மருத்துவ வண்டியில் மீனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். சேகரும் வீராவும் தங்கள் செய்த தவற்றை உணர்ந்தனர்.


 Q1.  (1)    சறுக்குறுளையில்
(2)    சறுக்குறுளையுடன்
(3)    சறுக்குறுளையால்
(4)    சறுக்குறுளையிலிருந்து


Q2.   (1)    கட்டடத்தில்
      (2)    கட்டடத்திற்கு
      (3)    கட்டடத்தின்
      (4)    கட்டடத்தை


Q3.   (1)    மீனாவை
      (2)    மீனாவிடம்
      (3)    மீனாவுக்கு
      (4)    மீனாவால்

Q4.   (1)    தலையை
      (2)    தலையுடன்
      (3)    தலையோடு
      (4)    தலையிலிருந்து


Q5.   (1)    உதவியுடன்
      (2)    உதவிக்கு
      (3)    உதவியால்
      (4)    உதவியின்


Q6.   (1)    தொலைபேசியால்
(2)               தொலைபேசியோடு
(3)               தொலைபேசியில்
(4)               தொலைபேசிக்கு



























A2 செய்யுள் / பழமொழி

Q7முதல் Q12 வரையுள்ள செய்யுள் / பழமொழியை நிறைவு செய்வதற்காக ஏற்ற சொல்லைக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களிலிருந்து தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு. (12 மதிப்பெண்கள்)

Q7. கைப்பொருள் தன்னின் __________________ கல்வி.
     (1) நிலைபொருள்
     (2) மெய்ப்பொருள்
     (3) தொல்பொருள்
     (4) பெரும்பொருள்


Q8. _______________ பாராத வேலை ஒரு முழம் கட்டை.

(1)    உரியவன்
(2)    இளையவன்
(3)     உடையவன்
(4)     ஆள்பவன்


Q9. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
   __________________ உரியர் பிறர்க்கு.

(1)    என்றும்
(2)    எங்கும்
(3)     எவரும்
(4)     என்பும்


Q10. கரைப்பார் கரைத்தால் கல்லும் ____________________.

(1)    கரையும்
(2)    மறையும்
(3)     உறையும்
(4)     குறையும்







Q11. விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
    ________________ தலைகாண்பு அரிது.

(1)    பசும்புல்
(2)    விளிம்பில்
(3)     களிப்பில்
(4)     பசும்பால்


Q12. எப்பொருள் எத்தன்மைத்து ______________ அப்பொருள்
     மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(1)    இருப்பினும்
(2)    காணினும்
(3)     எனினும்
(4)     ஆயினும்

























B3 தெரிவுவிடைக் கருத்தறிதல்

பின்வரும் கதையைக் கருத்தூன்றிப் படி.                      

பண்டை காலத்தில் இருந்த ஒரு நாட்டில் வழக்கம் ஒன்று இருந்தது. அந்நாட்டில் உள்ள முதியவர்களை வண்டியில் வைத்துக் காட்டுக்குள் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். அங்கு அவர்கள் விலங்குகளுக்கு இரையாகி விடுவார்கள். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினால்தான் அந்நாட்டு மன்னர் அப்படி ஒரு சட்டம் போட்டிருந்தார். 

ஒரு வீட்டில் முதியவர் ஒருவர் வேலை செய்ய இயலாமல் உண்பதுவும் உறங்குவதுமாக இருந்தார். அந்த முதியவரின் மகன் அந்நாட்டு வழக்கப்படி அவரை ஒரு வண்டியில் வைத்துக் கட்டி காட்டுக்குக் கொண்டு சென்றான். கூடவே அந்த முதியவரின் பேரனும் சென்றான். முதியவரின் மகன் தந்தையை வண்டியோடு விட்டு விட்டுப் புறப்பட்டான். தாத்தாவின் பரிதாப நிலையைக் கண்டு பேரன் மிகவும் வருந்தினான். அவரைக் காப்பாற்றத் தீர்மானித்தான். 

     அப்பா! நாம் இந்த வண்டியை எடுத்துக்கொண்டு போவோம். இன்னும் சில ஆண்டுகளில் உங்களுக்கும் வயதாகிவிடும். அப்போது இந்த வண்டி உங்களுக்குத் தேவைப்படும் அல்லவா?” என்று கேட்டான். தன் தவற்றை உணர்ந்த முதியவரின் மகன் தன் தந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தான். அவன் அவரை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டின் பின்புறத்தில் இருந்த ஓர் அறையில் தங்க வைத்தான். 

      ஒரு முறை நாட்டில் திடீரென நோய் பரவி, ஆடுமாடுகள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மாட்டுத் தொழுவம் வீட்டின் சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் மருந்து தெளித்துச் சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி முதியவர் தன் மகனிடம் அறிவுரை கூறினார். அந்த வருடம் நடைபெற்ற திருவிழாவிற்கு நாட்டு மக்கள் தங்கள் ஆடுமாடுகளை விருந்து சமைக்கப் பயன்படுத்தினர். ஆனால், நோய்க்குப் பலியாகாமல் மீதமிருக்கும் ஆடுமாடுகள் விவசாயம் செய்யத் தேவைப்படும் என்பதால், அவற்றை விருந்து சமைக்கப் பயன்படுத்த வேண்டாம் என்றும் முதியவர் தன் மகனுக்கு அறிவுரை கூறினார்.
                              
     விவசாயம் செய்யும் காலத்தில் மற்றவர்கள் கால்நடைகள் இன்றிச் சிரமப்பட்டனர்.  ஆனால், மகன் தன்னிடமிருந்த ஆடுமாடுகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்து அதிக செல்வத்தை ஈட்டினான். இச்செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. மன்னர் முதியவரின் மகனை வரக் கட்டளையிட்டு அவனை விசாரித்தார். அவன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மனம் திருந்திய மன்னர், “முதியவர்கள் தம் அனுபவத்தால் நமக்குப் பல அறிவுரைகளைக் கூறலாம். எனவே இந்தச் சட்டத்தை நீக்கி விடுகிறேன்,” என்று அறிவித்தார்.  

Q13 முதல் Q17 வரையுள்ள வினாக்கள் மேற்கண்ட கருத்தறிதல் பகுதியையொட்டி அமைந்துள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் உரிய மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு.
(10 மதிப்பெண்கள்)

Q13 முதியவர்கள் ஏன் காட்டில் விடப்பட்டனர்?

(1)      மன்னன் வயதானவர்களை வெறுத்ததால்
(2)      மன்னன் காட்டு விலங்குகளை வளர்த்து வந்ததால்
(3)      நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடாது என்பதால்
(4)      வயதானவர்கள் நாட்டிற்குப் பெருந்தொல்லை தந்ததால்


Q14 மகன் ஏன் தன் தந்தையை வீட்டின் பின்புற அறையில் மறைத்து வைத்தான்?

(1)               தன் தந்தை அங்கேயே இருந்து இறந்து விடுவார் என்பதால்
(2)               தன் தந்தை தனக்கு அவ்வப்போது உதவுவார் என்பதால்
(3)               தன் தந்தையின் நோய் மற்றவருக்குப் பரவக்கூடாது என்பதால்
(4)               தன் தந்தை உயிரோடு இருப்பது மன்னனுக்குத் தெரிந்தால்
ஆபத்து வந்துவிடும் என்பதால்


Q15 முதியவர் ஏன் ஆடுமாடுகளை விருந்துக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார்?

(1)   அவை நோய்வாய்ப்பட்டு இருந்தன என்பதால்
(2)               விவசாயம் செய்ய அவை தேவைப்படும் என்பதால்
(3)               அவை இறந்துவிடும் என்பதால்
(4)               மற்றவருக்கு அவை பயன்படும் என்பதால்




Q16  முதியவரின் மகன் மட்டும் எவ்வாறு அதிகச் செல்வம் பெற்றான்?

(1)                முதியவரின் அறிவுரையைக் கேட்டதால்
(2)               அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டதால்
(3)               தன் மகனின் ஆலோசனையைக் கேட்டதால்
(4)               ஊர் மக்களின் ஆலோசனையைக் கேட்டதால்        

           
Q17 அரசர் தான் போட்டிருந்த சட்டத்தை நீக்கக் காரணம் என்ன?

(1)   முதியவர்கள் மக்களைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக
(2)   முதியவர்களின் அறிவுரை நாட்டிற்குப் பயன்படும் என்பதற்காக
(3)   முதியவர்களுக்குத் தங்க இடம் தரவேண்டும் என்பதற்காக
(4)   முதியவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காக

B4 சொற்பொருள்

Q18 முதல் Q20 வரையுள்ள சொற்கள் மேற்கண்ட கருத்தறிதல் பகுதியில் இடம்பெற்றவை. அவற்றின் பொருளை உணர்த்தும் சரியான சொல்லைக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களிலிருந்து தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு. (6 மதிப்பெண்கள்)


Q18 தேவைப்படும்              (1) செயல்படும்
                           (2) கிடைக்கும்
                              (3) பயன்படும்
                              (4) நிலைக்கும்


Q19 சிரமப்பட்டனர்            (1) கஷ்டப்பட்டனர்
                           (2) அலைந்தனர்
                           (3) வருந்தினர்
                           (4) வேண்டினர்

                               
Q20 நீக்கி                     (1) நிறுத்தி
                           (2) அழித்து
                           (3) அகற்றி
                           (4) மறைத்து