Map of Tamilnadu

Wednesday, October 12, 2011

p3 tamil worksheet test practise 1

மாணவர்களே.. நான் உங்கள் பார்வைக்காக சில கேள்விகளை இங்கே புகுத்தி இருக்கிறேன்.. 
நீங்கள் பார்த்துப் பயன் பெறலாம்.. இது உங்கள் பயிற்சிக்காகவே போட்டிருக்கிறேன்.. 
நீங்க என்னிடம் ஒப்படைக்க வேண்டாம்.. கேள்விகள் இருந்தால் கேட்கலாம். 

சொற்பொருள்
என் மாமா மலேசியாவில் வசித்து வருகிறார்.
வாழ்ந்து
காத்து
இருந்து

சூரியன் காலையில் தோன்றியது
வந்தது
உதித்தது
மறைந்தது

புலி மாமிசத்தை விரும்பி உண்ணும்
மானை
இறைச்சியை
உணவை

குதிரை வேகமாக ஓடும்
விரைவாக
பக்கமாக
ஓரமாக

நாம் அன்றாடம்  குளிக்க வேண்டும்
அடிக்கடி
தினமும்
எப்போதும்

வேற்றுமை
நான் ________ மிட்டாய் வாங்கினேன்
கடையை
கடையில்
கடைக்கு

மாறன் _________ சென்றான்
பள்ளியை
பள்ளிக்கு
பள்ளியில்

நான் ________ வீட்டுக்குப் போனேன்
அம்மாவுக்கு
அம்மாவிடம்
அம்மாவுடன்

அன்னம் _________ நீந்தியது
குளத்தில்
குளத்திற்கு
குளத்தை

கமலா __________ படித்தாள்
பாடத்திற்கு
பாடத்தை
பாடத்தில்

முன்னுனர்வுக் கருத்தரித்தல்
குமார் தன வீட்டுத் தோட்டத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்தான். பந்தை வேகமாக ________________
பந்து பக்கத்து வீட்டு தோட்டத்தில் பொய் விழுந்தது. பந்தை _______________ குமார் பக்கத்து வீட்டின் சுவரில்
ஏறினான். சுவரில் ஏறி பக்கத்து வீட்டின் தோட்டத்திற்குள் குதித்தான். திடீரென்று நாய்கள் ________ சத்தம் கேட்டது. குமார் திரும்பிப் பார்த்தான். மூன்று நாய்கள் குமாரை _______ ஓடி வந்துகொண்டிருந்தன. நாய்களைப் பார்த்த குமார் _____________ அடைந்தான். அவன் மீண்டும் வேகமாக சுவரில் ஏறி தன் தோட்டத்திற்குள் குதித்தான். நாய்களிடமிருந்து தப்பியதை எண்ணி மகிழ்ந்தான்.


உதைத்தான்       குரைக்கும்      எடுக்க
விரைந்து      நோக்கி      அதிர்ச்சி


ஒலி வேறுபாடு

எலியின் _________________ நீளமாக இருக்கிறது
வால்      வாள்

குமார் ___________ மீன் பிடித்தான்
ஏரியில் ஏறியில்

சூரியனின் ________ தெரிந்தது
ஒளி    ஒலி

பூ நன்றாக __________ வீசியது
மனம்     மணம்

அப்பா _______________ சென்றார்
வேலைக்கு    வேளைக்கு

காலங்கள்

மாணவர்கள் நேற்று பாடம் படித்தார்கள்.
மாணவர்கள் நாளை பாடம் ________________.

கிளி அழகாகப் பேசியது.
கிளி இப்போது அழகாகப் _______________.

நீ வகுப்புக்கு வந்தாய்
நீ நாளை என் வீட்டுக்கு ______________?

மாலதி இப்போது நன்றாக நடனம் ஆடுகிறாள்
மாலதி சென்ற வாரம் நன்றாக நடனம் ____________________.

நீ நேற்று படம் பார்த்தாயா?
இப்போது நீ படம் ________________.


சுயவிடக் கருத்தரித்தல்
ஒரு நாள் வேடன் காட்டிருக்குச் சென்றான். அவன் காட்டிற்குள் நீண்ட தூரம் நடந்து சென்றான். ஆனால், அவன் கண்ணில் மிருகங்கள் ஒன்றும் தென்படவில்லை. நீண்ட தூரம் நடந்ததால் வேடன் களைத்துப் போனான். அவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவன் உட்கார்ந்த மரத்தில் எதோ சத்தம் கேட்டது. வேடன் மேலே அண்ணாந்து பார்த்தான். அவன் அதிர்ச்சி அடைந்தான்.
 
மரத்தின் மேலே ஒரு புலி உட்கார்ந்து இருப்பதைக் கண்டான். அவன் புளியைக் கொன்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தான். உடனே தன் கையில் இருந்த அம்பை வைத்து புளியைக் கொன்றான். புலி அம்பு பட்டு இறந்தது.
 
1. வேடன் ஏன் காட்டிர்க்குச் சென்றான்?
 
2. வேடன் ஏன் களைப்பு அடைந்தான்?
 
3. வேடன் புலியை எங்கு கண்டான்?
 
4. வேடன் புளியைக் கண்டதும் என்ன முடிவு செய்தான்?
 
5. புலி எப்படி இறந்தது?

p3 tamil worksheet test practise 2

Friday, October 7, 2011

எப்படிச் சொல்வது?

 
விளையாட்டுப்பூங்கா - playground
மேல்கீழ் ஆட்டப்பலகை - see saw
சறுக்கு - slide
ஊஞ்சல் - swing
நடைபாதை - pathway
மிதிவண்டிப்பாதை - bicycle path
பச்சைப்பசேலென - clean and green
குப்பைத்தொட்டி - dustbin / rubbish bin
உடற்பயிற்சி தளம் - exercise area
 
அடுக்குமாடிக்குடியிருப்பு  - housing apartments estate
அடுக்குமாடி - high rise flat
அடுக்குமாடியின் கீழ்த்தளம்  - void deck
அறிவிப்புப்பலகை - notice board
அறிவிப்பு - notice
பொதுத் தொலைபேசி - public telephone
அஞ்சல்பெட்டி - post box
மின்தூக்கி - lift
தூண்கள் - pillars
விளக்கு - light
 
ஈரச்சந்தை - wet market
மீன்கடை - fish stall
காய்கறிக்கடை - vegetable stall
பழக்கடை  - fruit stall
கோழிக்கடை - chicken stall
பலசரக்குக்கடை - grocery store
மளிகைக்கடை - grocery store
தராசு - scale ( to weigh things )
எடை நிறுக்க - to weigh things
ஈரமான தரை - wet floor
வழுக்கி விழுவதற்கு வாய்ப்பு - chance to slip and fall
கனமான பைகள் - heavy bags
தூக்க முடியாமல் - can not / unable to carry
 
பேரங்காடி - shopping centre
கடைத்தொகுதி -  shopping centre
கடைவரிசை - rows of shops
மருந்தகம் - pharmacy
துணிக்கடை - clothing store
பலசரக்குக்கடை - grocery store ( NTUC)
விளையாட்டுப்பொருள் விற்கும் கடை  - toy store
வாசனை திரவியங்கள் விற்கும் கடை - toy store
புத்தகக்கடை - book store
நூலகம் - library
மின்படிகள் - escalator
மின்தூக்கி - lift
தகவல் மையம் - information counter 
காவலாளி - securitu guard
 
நூலகம் - libray
அறிவிப்புப்பலகை - notice board
அறிவிப்பு - notice
அமைதி கடைப்பிடிக்க - maintai silence
இரவல் வாங்க - to borrow
புத்தகங்கள் - books
புத்தகப்பேழைகள் - books shelves / cupboards
நூலகர்கள் - librarians
நூலக அதிகாரிகள்  - library officers
கணினி - computer

Thursday, October 6, 2011

சிறுவர்களுக்கான வாய்மொழி - உரையாடல் குறிப்புகள்

வணக்கம் மாணவர்களே!
 
உங்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த சிறுவர் தின வாழ்த்துக்கள்!  திங்கள் அன்று வாய்மொழித்தேர்வு அல்லவா? அதற்காக நான் சில கடைசி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!
 
வாசித்தல் மிக சுலபமாக நீங்கள் செய்துவிடுகிறீர்கள்! ஆனால் உரையாடல் பகுதியில்தான் நிறைய பேர் தடுமாறுகிறீர்கள், அல்லவா? அதனால், நான் நேரடியாக உரையாடல் பகுதிக்கே சென்றுவிடுகிறேன்!
 
ஒரு படம் பார்த்துப் பேசத் துவங்கும் பொழுது, நீங்கள் கட்டாயமாக செய்யக் கூடியவை சில உண்டு! அவை வருமாறு -
 
* இந்தப் படம் ஒரு __________________________ சித்திரிக்கிறது / காட்டுகிறது.
 
* இங்கே நிறைய / சில / குறைவான / அதிகமான மக்கள் இருக்கிறார்கள்.
 
* இவர்கள் அனைவரும், பல வேலைகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். அல்லது
 
* இவர்கள் அனைவரும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் அல்லது
 
* இவர்கள் தத்தம் வேலைகளை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
 
 
இவ்வாறு சொல்லிவிட்டீர்கள் என்றாலேயே நீங்கள் ஆசிரியரின் கவனத்தை ஈர்த்துவிட்டீர்கள் என்று பொருளாகும். நீங்கள் இன்னும் என்னென்ன சொல்லப்போகிறீர்கள் என்பது குறித்து மிகவும் எதிர்பார்ப்புடன் ஆசிரியர் எங்கள் மீது கவனம் செலுத்தத் துவங்கிவிடுவார்! இதுவே நீங்கள் பெரும் முதல் வெற்றியாகும்.
 
~ மீண்டும் வந்து பாருங்கள் - இன்னும் நான் சில சொல்வளம் குறித்தும், உரையாடலை எவ்வாறு முடிப்பது என்பது குறித்தும் எழுதிப் போடுவேன்!

Wednesday, September 14, 2011

என் மாணவர்களின் கட்டுரைகள் - கௌதமன் 6A 2011

 "நன்றி மறவேல்" என்பது அவ்வையின் வாக்காகும். இந்த ஆட்டிசூடியை முன்பு மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று எண்ணியிருந்தேன்! ஆனால் அண்மையில் நடந்த சம்பவம் என் கருத்தை முழுதும் மாற்றியமைத்தது என்று கூறினால் அது மிகையாகாது! இந்த ஆத்திசூடியை நினைவு படுத்தும் வண்ணம் ஒரு சம்பவம் என் மனத்திரையில் அவ்வப்பொழுது நிழலாடும்...
நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். "சிலு சிலு"வென்று வீசும் காற்று என் முகத்தை முத்தமிட்டுச் செல்ல சூரிய வேந்தனின் செங்கதிர்கள் என் தொழில் பட்டு வியர்வு முத்துக்களை உருவாக்க, நான் மரங்களில் விரிந்திருந்த மலர்களின் மணத்தை உவகையுடன் சுவாசித்தேன்! " ஆ! அருமையான வாசனை!" என்று முணுமுணுத்துக்கொண்டே என் இல்லத்தை நோக்கி நடந்தேன். அப்போதுதான் அந்த உருவம் என் கண்களில் தென்பட்டது.
ஒரு நாய் தன் கண்களை மூடிக்கொண்டு பேச்சு மூச்சு இல்லாமல் சாலை ஓரமாக தரையில் பாவமாகக் கிடந்தது. " நாய்கள் இது போன்று உறங்காதே! வேறு பிரச்சனையினால்தான் இவாறு படுத்திருக்க வேண்டும்!" என்று நினைத்துக்கொண்டே நாயை நோக்கி நடந்து, அதனை உற்றுப் பார்த்தேன். அப்போதுதான் நாயின் தேகத்திலிருந்து குருதி கசிவதைக் கண்டேன். இரத்தம்!

நாய் என் வருகையை உணர்ந்துகொண்டு, தன் வாடிய முகத்தைத் திருப்பி என்னை உற்றுப் பார்த்தது. நானோ மனமிரங்கி 
அனலில் இட்ட புழுபோல் துடித்த நாயை என் வீட்டிற்கு தூக்கிச் சென்றேன். முதலில் நாய் சினங்கொண்ட சிங்கத்தின் சீற்றத்துடன் என்னைப் பார்த்துக் குறைக்க எண்ணியது; ஆனால், நான் அதை அன்புடன் தடவிக்கொடுத்து அதனை அமைதியாக்கினேன். பின் நான் என் வீட்டை நோக்கி நடந்தேன்!
 
வீட்டை அடைந்ததும் பையை என் மேசையில் வைத்தேன். நாயை அதன் அருகில் கிடத்தி அதன் காயத்தைப் பஞ்சால் சுத்தப்படுத்தினேன்; வழியைப் போக்கும் மருந்தை எடுத்து காயங்களின் மேல் பூசினேன். என் பெற்றோரிடம் கேட்டு அந்த நாயை என் செல்லப் பிராணியாக  வைத்துக்கொண்டேன். சில வாரங்களில் நாயும் பூரண குணமானது. அந்த நாய்க்கு நான் ஜிம்மி என்று பெயர் வைத்தேன்.
 
சில மாதங்களுக்குப் பிறகு, என் பெற்றோர் இருவரும் வெளியூர் செல்ல நேரிட்டிருந்தது. நானும் ஜிம்மியும் வீட்டில் தனியாக இருந்தோம். நள்ளிரவில் எனக்கு நல்ல தூக்கம். அப்போது என் வீட்டுக் கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஜிம்மி கண்களைத் திறந்தது. அது கதவைத் திறந்தவனைப் பார்த்து என் காதுகளே வெடித்துவிடும்போல் குறைக்க ஆரம்பித்தது. நான் இரைச்சலைக் கேட்டுத் திடுக்கிட்டு கண் விழித்தேன். எங்கேயோ இருந்த வெளிச்சம் என் கண்களைக் கூசச் செய்தது. என்ன நடக்கிறது என்று பார்க்க நான் சந்தனமின்னலைப்போல பாய்ந்து வெளியே வந்தேன். அங்கே நான் கண்ட காட்சி என்னைச் சிலையாய் மாற்றியது. அங்கே ஓர் ஆடவன் அறையின் ஒரு மூலையில் பதுங்கி நின்றுகொண்டிருந்தான். ஜிம்மி தொடர்ந்து குறைத்துக்கொண்டேயிருந்தது. திடீரென்று அந்த ஆள் கதவை நோக்கிப் பாய நினைத்தபோது, ஜிம்மியும் பாய்ந்து அவன் காலைக் கடித்துக் குதறத் துவங்கியது! அந்த சமயத்தில் அவன் வழியால் தரையில் சாய்ந்தான். அப்போதும் ஜிம்மி அவனை விடுவதாக இல்லை. அதுதான் தக்க தருணம் என்று நினைத்து நான் காவலர்களுக்குத் தொலைபேசியின் வாயிலாக அழைத்தேன்.
 
காவலர்கள் வெகு விரைவில் வந்து சேர்ந்தார்கள். வீட்டினுள் புகுந்த கயவனைப் பிடித்துச்க் சென்றார்கள். அன்று நடந்த சம்பவம் சிலியில் செதுக்கிய எழுத்துப்போல என் மனதில் பதிந்துகொண்டது. எந்நேரமும் ஆத்திசூடியையும் அந்தச்சம்பவத்தையும் நினைவுகொள்ளும்போது என் வீட்டையும் என்னையும் காத்த என் நாய் ஜிம்மியை அழைத்து, அதனை அன்புடன் தடவிக் கொடுப்பேன்!
more follows...  look out for continuation..

Tuesday, September 13, 2011

என் மாணவர்களின் கட்டுரைகள் - ராஜலக்ஷ்மி 6B 2011


 "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்ற பழமொழிக்கேற்ப நாம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும்! இந்த பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், நான் ஒரு சம்பவத்திற்குப் பிறகுதான் புரிந்துகொண்டேன் என்று சொன்னால் அது மிகையாகாது!

"பந்தைத் தூக்கிப் போடு! " என்று நான் கத்தினேன். நானும் என் தம்பியும் விளையாட்டு மைதானத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்தோம். களைப்பாக இருந்ததால்வீட்டிற்குத் திரும்பினோம்.   வீட்டிருக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு என் பள்ளி வீட்டுப்பாடங்களைச் செய்தேன். உணவைச் சாப்பிட்டுவிட்டு என் படுக்கை அறையில் படுத்தேன். இதேமாதிரிதான் நான் தினமும் செய்துகொண்டிருந்தேன். என் நேரத்தை நான் இப்படித்தான் வீனாக்கிகொண்டிருந்தேன்!

அந்த வாரம் எனக்குத் தேர்வு வாரமாக இருந்தது. கணக்குத் தேர்வு. அந்தத் தேர்வில் எனக்கு ஒரு கேள்விகூட புரியவில்லை! அப்போதே, எனக்கு நன்றாக நான் செய்யமாட்டேன் என தெரிந்துவிட்டது! இந்தத் தகவலை என் பெற்றோரிடம் சொல்வதற்கும் பயமாக இருந்தது.

அடுத்த நாளே என் தேர்வின் முடிவுகளும், மதிப்பெண்களும் எங்களுக்குக் கிடைத்துவிட்டன. என்ன ஒரு கவலை! நான் நினைத்தபடியே நான் நன்றாகச் செய்யவில்லை. இதை நான் எப்படி என் பெற்றோரிடம் சொல்லப்போகிறேன் என்று நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

பெற்றோர் கையொப்பம் வாங்க நான் என் தேர்வுத்தாட்களை என் அப்பாவிடம் காட்டினேன். அவர் என் மதிப்பெண்களைப் பார்த்து கோபம் அடைந்தார்.என்ன ஆச்சரியம்! என் தந்தை என்னைத் திட்டவே இல்லை! அதற்க்கு மாறாக அவர் எனக்கு ஓர் அறிவுரை கூறினார்.

இந்த அறிவுரைதான் என்னை இப்போது ஒரு பெரிய மருத்துவராக மாற்றியதர்க்குக் காரணம் ஆகும். என் அப்பா, " நீ எப்போதும் விளையாடிக்கொண்டே இருக்கிறாய்! நேரம் அதிகமாக வீணாகிறது! நீ விளையாடும் நேரத்தில், வீட்டுப்பாடம் தவிர்த்து பொது தாட்களையும் மாதிரித் தேர்வுத்தாட்களையும் செய்து வன்திருந்தால், இந்தத் தேர்வில் நீ நன்றாகச் செய்திருப்பாய் அல்லவா?" என்று வினவினார். என் கண்களில் கண்ணீர் வரும் போல இருந்தது!

அப்போதுதான் நான் என் தவற்றை உணர்ந்துகொண்டேன். நான் இன்று முதல் நன்றாகப் படித்து என் பள்ளியில் முதல் மாணவராக வரவேண்டும் என உறுதிகொண்டேன். அன்று முதல் நான் நட்ராகப் படித்து, என் நேரத்தை வீணாக்காமல் நடந்துகொண்டேன். நான் உறுதி பூண்டதுபோலவே என் பள்ளியில் நான் தான் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவனாகத் திகழ்ந்தேன்!  என் அப்பாவுக்குப் பெருமையாக இருந்தது! என் அப்பாவின் அறிவுரைப்படி நான் நடந்துகொண்டதால் நான் முன் கூறிய பழமொழிக்கேற்ப, இன்று நான் ஒரு சிறந்த மருத்துவராக இருக்கிறேன்.  

The portions in italics and in a different colour are the areas that I have had to meddle and correct the phrasing or the content! hope these help my P6 and all other P6 pupils who have their upcoming PSLE exams!!

Love,
Raihana Aasiriyar

Friday, August 12, 2011

இனிய வாக்கியங்களையும், அழகிய சொற்றொடர்களையும் படியுங்கள்!

மாணவர்களாகிய நீங்கள் தொடக்கநிலை நான்கிலிருந்து ஆறு வரையில் அதற்கும் மேல் கூட சில இனிய வாக்கியங்களையும், அழகிய சொற்றொடர்களையும் 
கட்டுரை எழுதும் பொழுதும் வாய்மொழித் தேர்வுகளில் பேசும் போதும் பயன்படுத்தலாம்.  
அதற்கேற்றாற்போல வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ள நான் உங்களுக்குப் பாகுபடுத்தப்பட்ட சில இனிய வாக்கியங்களையும், அழகிய சொற்றொடர்களையும் கொடுத்திருக்கிறேன்!
படியுங்கள்! பயனடையுங்கள்!!

இயற்கை

* சிலு சிலுவென தென்றல் காற்று வீசிக்கொண்டிருந்த வேளை!

* நண்பகல் வெயில் அனலாக இருந்தது!

* பொன்னிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பசுமையான தோட்டம் அது.

* இரு மருங்கிலும் பசுமையான காட்சிகளைக் கண்டு களித்தான்

* கண்களைக் கவரும் இயற்கை அழகு



மாலை நேரம் / இரவு

* வட்ட வடிவழகி நிலாப் பெண்ணாள் தன்னொளியை வீசிக்கொண்டு வானத்தில் பவனி வரும் நேரம்.

* மாலைக் கதிரவனின் செம்மை உலகம் முழுவதும் பரவியது

* கதிரவனின் ஒளிமென்மையாகவும் மாலைக் காற்று சில்லென்றும்
இதமாகவும் இருந்தது.

* கதிரவன் கோபம் தணிந்து பூமியிலிருந்து ஒதுங்கிட, காற்று ஜில் என்று
வீசியது.

* கதிரவன் தன வேலையைச் சந்திரனிடம் ஒப்படைத்துச் சென்றான். விண்மீன்கள் பளிச் என்று மின்னின!

* நீல வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நட்சத்திறங்கள் கண் சிமிட்டின.





அதிர்ச்சி 

* அடிவயிற்றில் இடி விழுந்தது 

* திகிலடைந்தேன் 

* வார்த்தைகள் தொண்டைக்குழியில் மாட்டிக்கொண்டு வெளிவரத் தவித்தன 

* இதயத் துடிப்பே ஒரு கணம் நின்றுவிடும் போல ஓர் உணர்வு ஏற்பட்டது 

* ஒரு கணம் செய்வதறியாது திகைத்து நின்றான் 

* என்னை தொட்ட பொழுது தான் நான் சுய நினைவுக்கு வந்தேன் 





இன்னல் படுவது / துன்பம்

* வலையில் அகப்பட்ட மீனைப்போல வேதனையில் துடித்தான்

* சிங்கத்திடம் சிக்கிய மானைப்போல மிரண்டான்

* துக்கம் தொண்டையை அடைக்க கண்களில் நீர் அருவியென வழிந்தது

* நோய் வாட்டத் தொடங்கியது

* என் கண்களிலிருந்து நீர் சொரிந்தது. என் உள்ளம் அழுதது

* கண்ணீர் ஆற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது

* முகத்தில் ஈயாடவில்லை

* அவள் தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள்

* எதையும் பேச நா எழவில்லை



கவலை

* சோகக் கடலில் மூழ்கி இருந்தேன்

* மலர்ந்த முகம் வாடியது

* முகத்தில் சோகம் நிழலாடியது

* உலகம் இருண்டு விட்டது போல இருந்தது

* அவன் நிலை குலைந்து நின்றான்

* முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு



காற்று
* காற்றின் அசைவினால் மரங்களில் ஏற்பட்ட சலசலப்பு அந்த நிசப்தத்தில் நன்றாய்க் கேட்டன
* தென்றல் இனிமையாக வீசி மரங்களில் விரிந்திருந்த மலர்களின் மணத்தை எங்கும் பரப்பியது
* தென்றல் அவனது முகத்தை முத்தமிட்டுச் சென்றது
* தென்றல் இதமாக வீசி அவன் கன்னத்தைத் தடவிச் சென்றது
*  சிலு சிலுவென்று வீசிக்கொண்டிருந்த தென்றல் அனைவரையும் மயக்கியது

கொண்டாட்டம் - மகிழ்ச்சி


* அவனுள்ளத்தில் ஒரு வகை உல்லாசம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது

* முகமெல்லாம் பல்லாகத் தெரிந்தது

* என் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி தோன்றியது

* என் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை!

* பிள்ளையின் செயலைக் கண்ட பெற்றோர் பேருவகை அடைந்தனர்

* உல்லாச வானில் சிறகடித்துப் பறப்பது போல இருந்தது

* சொர்க்கலோகத்தில் இருப்பது போல உணர்ந்தாள்

* ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழியும் வரை சிரித்தேன்

* மகிழ்ச்சி வெள்ளம் அவன் மனதில் கரை புரண்டோடியது

* அன்று மலர்ந்த மல்லிகை போல அவன் முகம் மலர்ந்தது

* மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்

* நெஞ்சில் நிரம்பிப் பொங்கிக்கொண்டிருந்த ஆனந்தம் கண்ணீராய்
வெளிவந்தது




மழை

* கார்மேகங்கள் வானத்தைச் சூழ்ந்தன

* மழை வருவதற்கு  அறிகுறியாக கருமுகில்கள் வானத்தைச் சூழ்ந்து கொண்டன

* பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்தது

* வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. மேகங்கள் கதிரவனை மறைக்கத் தொடங்கின




ஒற்றுமை

* பூவும் நாறும் போல

* நகமும் சதையும் போல

* இணை பிரியா தோழிகள்

~~~~~~~~~~~~~~~~~ more coming soon.

Monday, August 8, 2011

தொடக்கநிலை 6 - தேசிய தின வீட்டுப்பாடம்!

மாணவர்களே, இல் என்னால் பாடத்தைப் புகுட்ட முடியவில்லை. ஆதலால் 
நான் இங்கு உங்கள் தேசிய வீட்டுப்பாடத்தைக் கொடுக்கிறேன். பதில்களை 
ஒரு தாளில் நீங்கள் எழுதி வாருங்கள். 
A1 வேற்றுமை

Q1 முதல் Q6 வரையுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமான வேற்றுமை உருபு ஏற்ற சொல்லைக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களிலிருந்து தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு. (12 மதிப்பெண்கள்)

அது பள்ளி விடுமுறை காலம். மாலை நேரத்தில் சேகரும் வீராவும் பூங்காவில் சந்தித்து விளையாடுவது வழக்கம். அன்றும் அவர்கள் கையில்  ( Q1)_______ வீட்டை விட்டு புறப்பட்டனர். அவர்கள்  (Q2)______ கீழ்த்தளத்தில் சந்தித்தனர். இருவரும் வேகமாக சறுக்கிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். அப்போது எதிரே வந்த  (Q3)_______  மின்னலாய் சறுக்கி வந்த சேகர் மோதினான். மீனா தரையில் விழுந்தாள். மீனாவின்  (Q4)_______ ரத்தம் கொட்டியது. சேகர் அதிர்ந்து போனான். அந்தப் பக்கமாக சென்றவர்கள்  (Q5)________ வந்தனர். அவர்கள் உடனடியாக (Q6) _________ மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டனர். விரைந்து வந்த மருத்துவ வண்டியில் மீனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். சேகரும் வீராவும் தங்கள் செய்த தவற்றை உணர்ந்தனர்.


 Q1.  (1)    சறுக்குறுளையில்
(2)    சறுக்குறுளையுடன்
(3)    சறுக்குறுளையால்
(4)    சறுக்குறுளையிலிருந்து


Q2.   (1)    கட்டடத்தில்
      (2)    கட்டடத்திற்கு
      (3)    கட்டடத்தின்
      (4)    கட்டடத்தை


Q3.   (1)    மீனாவை
      (2)    மீனாவிடம்
      (3)    மீனாவுக்கு
      (4)    மீனாவால்

Q4.   (1)    தலையை
      (2)    தலையுடன்
      (3)    தலையோடு
      (4)    தலையிலிருந்து


Q5.   (1)    உதவியுடன்
      (2)    உதவிக்கு
      (3)    உதவியால்
      (4)    உதவியின்


Q6.   (1)    தொலைபேசியால்
(2)               தொலைபேசியோடு
(3)               தொலைபேசியில்
(4)               தொலைபேசிக்கு



























A2 செய்யுள் / பழமொழி

Q7முதல் Q12 வரையுள்ள செய்யுள் / பழமொழியை நிறைவு செய்வதற்காக ஏற்ற சொல்லைக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களிலிருந்து தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு. (12 மதிப்பெண்கள்)

Q7. கைப்பொருள் தன்னின் __________________ கல்வி.
     (1) நிலைபொருள்
     (2) மெய்ப்பொருள்
     (3) தொல்பொருள்
     (4) பெரும்பொருள்


Q8. _______________ பாராத வேலை ஒரு முழம் கட்டை.

(1)    உரியவன்
(2)    இளையவன்
(3)     உடையவன்
(4)     ஆள்பவன்


Q9. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
   __________________ உரியர் பிறர்க்கு.

(1)    என்றும்
(2)    எங்கும்
(3)     எவரும்
(4)     என்பும்


Q10. கரைப்பார் கரைத்தால் கல்லும் ____________________.

(1)    கரையும்
(2)    மறையும்
(3)     உறையும்
(4)     குறையும்







Q11. விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
    ________________ தலைகாண்பு அரிது.

(1)    பசும்புல்
(2)    விளிம்பில்
(3)     களிப்பில்
(4)     பசும்பால்


Q12. எப்பொருள் எத்தன்மைத்து ______________ அப்பொருள்
     மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(1)    இருப்பினும்
(2)    காணினும்
(3)     எனினும்
(4)     ஆயினும்

























B3 தெரிவுவிடைக் கருத்தறிதல்

பின்வரும் கதையைக் கருத்தூன்றிப் படி.                      

பண்டை காலத்தில் இருந்த ஒரு நாட்டில் வழக்கம் ஒன்று இருந்தது. அந்நாட்டில் உள்ள முதியவர்களை வண்டியில் வைத்துக் காட்டுக்குள் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். அங்கு அவர்கள் விலங்குகளுக்கு இரையாகி விடுவார்கள். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினால்தான் அந்நாட்டு மன்னர் அப்படி ஒரு சட்டம் போட்டிருந்தார். 

ஒரு வீட்டில் முதியவர் ஒருவர் வேலை செய்ய இயலாமல் உண்பதுவும் உறங்குவதுமாக இருந்தார். அந்த முதியவரின் மகன் அந்நாட்டு வழக்கப்படி அவரை ஒரு வண்டியில் வைத்துக் கட்டி காட்டுக்குக் கொண்டு சென்றான். கூடவே அந்த முதியவரின் பேரனும் சென்றான். முதியவரின் மகன் தந்தையை வண்டியோடு விட்டு விட்டுப் புறப்பட்டான். தாத்தாவின் பரிதாப நிலையைக் கண்டு பேரன் மிகவும் வருந்தினான். அவரைக் காப்பாற்றத் தீர்மானித்தான். 

     அப்பா! நாம் இந்த வண்டியை எடுத்துக்கொண்டு போவோம். இன்னும் சில ஆண்டுகளில் உங்களுக்கும் வயதாகிவிடும். அப்போது இந்த வண்டி உங்களுக்குத் தேவைப்படும் அல்லவா?” என்று கேட்டான். தன் தவற்றை உணர்ந்த முதியவரின் மகன் தன் தந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தான். அவன் அவரை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டின் பின்புறத்தில் இருந்த ஓர் அறையில் தங்க வைத்தான். 

      ஒரு முறை நாட்டில் திடீரென நோய் பரவி, ஆடுமாடுகள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மாட்டுத் தொழுவம் வீட்டின் சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் மருந்து தெளித்துச் சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி முதியவர் தன் மகனிடம் அறிவுரை கூறினார். அந்த வருடம் நடைபெற்ற திருவிழாவிற்கு நாட்டு மக்கள் தங்கள் ஆடுமாடுகளை விருந்து சமைக்கப் பயன்படுத்தினர். ஆனால், நோய்க்குப் பலியாகாமல் மீதமிருக்கும் ஆடுமாடுகள் விவசாயம் செய்யத் தேவைப்படும் என்பதால், அவற்றை விருந்து சமைக்கப் பயன்படுத்த வேண்டாம் என்றும் முதியவர் தன் மகனுக்கு அறிவுரை கூறினார்.
                              
     விவசாயம் செய்யும் காலத்தில் மற்றவர்கள் கால்நடைகள் இன்றிச் சிரமப்பட்டனர்.  ஆனால், மகன் தன்னிடமிருந்த ஆடுமாடுகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்து அதிக செல்வத்தை ஈட்டினான். இச்செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. மன்னர் முதியவரின் மகனை வரக் கட்டளையிட்டு அவனை விசாரித்தார். அவன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மனம் திருந்திய மன்னர், “முதியவர்கள் தம் அனுபவத்தால் நமக்குப் பல அறிவுரைகளைக் கூறலாம். எனவே இந்தச் சட்டத்தை நீக்கி விடுகிறேன்,” என்று அறிவித்தார்.  

Q13 முதல் Q17 வரையுள்ள வினாக்கள் மேற்கண்ட கருத்தறிதல் பகுதியையொட்டி அமைந்துள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் உரிய மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு.
(10 மதிப்பெண்கள்)

Q13 முதியவர்கள் ஏன் காட்டில் விடப்பட்டனர்?

(1)      மன்னன் வயதானவர்களை வெறுத்ததால்
(2)      மன்னன் காட்டு விலங்குகளை வளர்த்து வந்ததால்
(3)      நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடாது என்பதால்
(4)      வயதானவர்கள் நாட்டிற்குப் பெருந்தொல்லை தந்ததால்


Q14 மகன் ஏன் தன் தந்தையை வீட்டின் பின்புற அறையில் மறைத்து வைத்தான்?

(1)               தன் தந்தை அங்கேயே இருந்து இறந்து விடுவார் என்பதால்
(2)               தன் தந்தை தனக்கு அவ்வப்போது உதவுவார் என்பதால்
(3)               தன் தந்தையின் நோய் மற்றவருக்குப் பரவக்கூடாது என்பதால்
(4)               தன் தந்தை உயிரோடு இருப்பது மன்னனுக்குத் தெரிந்தால்
ஆபத்து வந்துவிடும் என்பதால்


Q15 முதியவர் ஏன் ஆடுமாடுகளை விருந்துக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார்?

(1)   அவை நோய்வாய்ப்பட்டு இருந்தன என்பதால்
(2)               விவசாயம் செய்ய அவை தேவைப்படும் என்பதால்
(3)               அவை இறந்துவிடும் என்பதால்
(4)               மற்றவருக்கு அவை பயன்படும் என்பதால்




Q16  முதியவரின் மகன் மட்டும் எவ்வாறு அதிகச் செல்வம் பெற்றான்?

(1)                முதியவரின் அறிவுரையைக் கேட்டதால்
(2)               அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டதால்
(3)               தன் மகனின் ஆலோசனையைக் கேட்டதால்
(4)               ஊர் மக்களின் ஆலோசனையைக் கேட்டதால்        

           
Q17 அரசர் தான் போட்டிருந்த சட்டத்தை நீக்கக் காரணம் என்ன?

(1)   முதியவர்கள் மக்களைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக
(2)   முதியவர்களின் அறிவுரை நாட்டிற்குப் பயன்படும் என்பதற்காக
(3)   முதியவர்களுக்குத் தங்க இடம் தரவேண்டும் என்பதற்காக
(4)   முதியவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காக

B4 சொற்பொருள்

Q18 முதல் Q20 வரையுள்ள சொற்கள் மேற்கண்ட கருத்தறிதல் பகுதியில் இடம்பெற்றவை. அவற்றின் பொருளை உணர்த்தும் சரியான சொல்லைக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களிலிருந்து தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு. (6 மதிப்பெண்கள்)


Q18 தேவைப்படும்              (1) செயல்படும்
                           (2) கிடைக்கும்
                              (3) பயன்படும்
                              (4) நிலைக்கும்


Q19 சிரமப்பட்டனர்            (1) கஷ்டப்பட்டனர்
                           (2) அலைந்தனர்
                           (3) வருந்தினர்
                           (4) வேண்டினர்

                               
Q20 நீக்கி                     (1) நிறுத்தி
                           (2) அழித்து
                           (3) அகற்றி
                           (4) மறைத்து